2017 தமிழ் பரா விளையாட்டுப் போட்டி ஊடக சந்திப்பு அறிக்கை.
மாற்றத்தை நோக்கி மாற்றுத் திறனாளிகள் என்னும் தொனிப்பொருளில். மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழா 2017.
மாற்றத்தை நோக்கி மாற்றுத் திறனாளிகள் என்னும் தொனிப்பொருளில்..... மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழா 2017.
நாங்கள் தமிழ் மாற்றுத்திறனாளிகள் பேசுகின்றோம்.
போர் தாண்டவமாடிய பூமியில் அந்த போரின் வடுக்கள் நாங்கள், வலிகள் நாங்கள்
நீங்கள் இந்த மண்ணை கடந்து செல்லும்போது எங்கோ ஒரு திசையில் ஒரு சக்கர நாற்காலி நகர்ந்துகொண்டிருக்கும், அதே சக்கரநாற்காலியில் ஒரு மாற்றுத்திறனாளி நகர்ந்துகொண்டிருப்பார்.
பார்வைகளை இழந்த ஒருவர் வெண்பிரம்பின் துணையோடு நடந்துகொண்டிருப்பார்.
கைகள் இல்லாதவர்கள், கால்கள் இல்லாதவர்கள் என்ற ஒரு பெரும் சமூக கூட்டம் உங்களுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. மாற்றுத்திறனாளிகள் என்றால் மற்றவர்களில் தங்கி வாழ்பவர்கள், மற்றவர்களின் உதவியோடு வாழ்பவர்கள் என்ற பொதுவான கருத்திலிருந்து மீண்டு, நாமே நமக்கு உதவி புரிந்து வாழும் ஒரு நிலையை நோக்கி நாங்கள் நகரவேண்டுமென்று துடிக்கிறோம்.
அதற்காக பெருமுயற்சிகளை நாம் எடுத்துவருகிறோம். இன்று முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான தனித்துவமான உயிரிழை என்ற அமைப்பு இயங்கி வருகின்றது. அது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டு முள்ளத்தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் வாழ்வில் ஒரு வெளிச்சத்தை கொண்டுவர முயற்சிக்கின்றது. அதுபோல மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகள் இணைந்து மட்டக்களப்பு மாற்றுத்திறனாளிகள் சம்மேளனம் என்ற அமைப்பை உருவாக்கி, கிழக்கிலே வாழக்கூடிய மாற்றுத்திறனாளிகளை வளப்படுத்த உழைக்கிறது.
தமிழ் மாற்றுத்திறனாளிகளையும் , தமிழ் மாற்றுத்திறனாளிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களையும் ஒருங்கிணைக்கும் முகமாக தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பு "DATA" உருவாக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் உயிரிழை , மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சம்மேளனம் ஆகியவை தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பில் இணைகின்றன.மாற்றுத் திறனாளிகளை அவர்களின் பாதிப்புக்களின் அடிப்படையில் உப பிரிவுகளாக உள்வாங்கப்பட்டுள்ளார்கள். இது அவர்களின் தேவைகள் குறித்தான புரிதலை மேம்படுத்தவும் அவர்களுக்கிடையிலான உறவுகளை விரிவாக்கவும் உதவுகின்றன.
1. உயிரிழை - முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாகும்.
2. விழிகள் - விழிப்புலன் பாதிக்கப்பட்டோர் அனைவரும், அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களும் உள்வாங்கப்படுவார்கள்
3. கரங்கள் : கரங்களை இழந்தோர் மற்றும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்கள் உள்வாங்கப்படுவார்கள்
4. பாதங்கள் : கால்களை இழந்தோர் மற்றும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்கள் உள்வாங்கப்படுவார்கள்
5. உள்ளம் : உளவளம் பாதிக்கப்பட்டோர் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்கள் உள்வாங்கப்டுவார்
6.ஓசை : செவிப்புலன் பாதிக்கப்பட்டோர், மற்றும் பேச்சாற்றல் அற்றோர் உள்வாங்கப்படுவார்கள்.
தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் அங்கத்தவர்களாக தமிழ் மாற்றுத் திறனாளிகளே இருப்பர். அதன் நிறைவேற்றுக் குழுவிலும் தமிழ் மாற்றுத் திறனாளிகளே இருப்பர். அவர்களின் முயற்சிக்கு உறுதுணை வழங்கும் சமூக ஆர்வலர்கள் மாற்றுத் திறனாளிகளோடு இணைந்து பணியாற்றுவார்கள் தற்போதைய நிலையில் வடக்கு மாகாணப்போட்டிகள் அனைத்தும் உயிரிழையில் ஒருங்கிணைப்பிலும் , கிழக்கு மாகாணத்தின் போட்டிகள் அனைத்தும் மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சம்மேளனம் ஒருங்கிணைப்பிலும் நடைபெறும்.
இப்போட்டிகளை DATA வுடன் , நம்பிக்கை ஒளி அமைப்பு, ஐ,பிசி தமிழ் இணைந்து நடாத்துகின்றன. சென்ற ஆண்டு முதல் ஐ.பி.சி தமிழ் , நம்பிக்கை ஒளி எம்மோடு பயனிப்பதை இட்டு அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை கூறுகின்றோம். 2016ம் ஆண்டு நங்கள் ஒரு மாபெரும் விளையாட்டுப் போட்டியை நடத்தினோம். வடக்கிலும் கிழக்கிலும் வாழும் அனைத்து மாற்றுத்திறனாளிகள் பங்குகொள்ளும் ஒரு விளையாட்டுப் போட்டியினை நடத்தினோம். அது ஒரு சாதாரண விளையாட்டாக கருதிவிட முடியாது. அது எங்களை, எங்களை போன்றவர்களை ஒரு மைதானத்துக்குள் கொண்டுவந்தது. எமது வாழ்வில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்வதற்கு ஒரு உந்துகோலாக இருந்தது.
எமது நிலை குறித்து எமது சமூகத்திடம் முதலில் சொல்வதற்கு அந்த விளையாட்டுப்போட்டி உதவின இந்த போட்டிகளை நாமே தமைமை ஏற்று நடாத்தினோம், நாமே அவற்றை ஒருங்கிணைத்தோம். இயலாதவர்கள் , ஏலாதவர்கள், அங்கம் இழந்தவர்கள் என்ற நிலை மாறி வருவதை நாம் உணர்கின்றோம்.
ஒருபுறம் மாற்றுத் திறனாளிகள் பலர் நல்ல பலன்களை பெற்று , இன்று தாம் சுயமாக தொழில் செய்ய முயல்கின்றார்கள். அவர்களின் சாதனைகளை கண்டு பூரிப்பு அடைகின்றோம். அதேவேளை வாழ்வாதாரமும் இன்றி உழைக்கும் சக்தியும் இன்றி தெருவோரம் யாசித்து வாழும் மாற்றுத் திறனாளி சகோதரர்களுக்காகவும் நாம் இன்று உங்கள் முன்பிருந்து பேசுகின்றோம். மாற்றுத் திறனாளிகளுக்கான திணைக்களங்கள் இருக்கின்றன. பல தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. பூமிப்பந்து முழுவதும் எமது உறவுகள் இருக்கின்றார்கள். ஆனாலும் இன்னமும் பல மாற்றுத் திறனாளிகள் வாழ்வு இருண்ட சூனியமாக இருக்கின்றது கவலை தருகின்றது.
நம்மில் எத்தனை மாற்றுத் திறனாளிகள் இருக்கின்றார்கள் ?
அவர்கள் எப்படி இருக்கின்றார்கள் ?
அவர்களுக்கு வாழ்வு இனி எப்படி செல்லப்போகின்றது......................
இவை எல்லம் விடை தெரியாத கேள்விகளா ?
இல்லை விடை வேண்டாம் என்று விடப்பட்ட கேள்விகளா.....................
இவ்வாறு நொந்து வெந்து வாழும் ஒரு சமூகக் கூட்டம் அதன் அடுத்த படிநிலை நோக்கி செல்கின்றது.
நாம் ஒரு பேசு பெருளாக வரவேண்டும். மாற்றுத்திறனாளி ஒரு பேசு பொருளாக வரவேண்டும்
எமது சக்கர நாட்காலி முன்னோக்கி நகர வேண்டும், அது எம் மரணம் வரை சுற்றி சுழல வேண்டும்.
அதன் அடுத்த கட்டமாக இம்முறையும் நாம் ஒரு பிரமாண்டமான தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டியை கிளிநொச்சியிலும் மட்டக்கிளப்பிலும் நடாத்த விளைகிறோம். இது ஒரு சாதாரனமான விளையாட்டு போட்டி இல்லை. இயலாது என்று ஒதுங்கியவர்களும் , ஒதுக்கப்பட்டவர்களும் தம்மாலும் இயலும் என்று கூறி களம் காணும் ஒரு அற்புத் திருவிழா. இன்றிலிருந்து 3 மாதங்கள் நாம் கவலைகளை மறந்து போட்டிகளுக்காக உழைக்கப்போகின்றோம். மாவட்டம் தோறும் வந்து எமது சக மாற்றுத் திறனாளிகளை இனம் கண்டு மைதானம் அழைத்து வருவோம். முறையான உடற்பயிற்சி இன்மையும் , விளிப்புணர்வு இன்மையும் எம்மில் எத்தனையோ பேரின் உயிரை காவு கொண்டு விட்டது. இவற்றிலிருந்து மீண்டு நாம் மகிழ்வாக ஓர் விழாவை நடாத்து கின்றோம்.
கடல்கடந்துபோய் புலம்பெயர் தேசத்தில் வாழும் எமது உறவுகளின் அன்பால் அவர்கள் தரும் ஆக்கத்தினால் இந்த விளையாட்டு போட்டி நடைபெறுகின்றது. எம்மண்ணிலே வாழும் நீங்கள், எம்மீது பொழியும் அன்பும் இந்த விளையாட்டுப் போட்டிக்கு பெரும் அணி சேர்க்கிறது.
ஊடக நண்பர்கள் எமக்கு உறுதுணையாக இருப்பார்கள். இருக்க வேண்டுமென அன்போடும் , உரிமையோடும் கேட்கின்றோம். நாங்கள் ஆடி மாதம் 28ம் 29ம் திகதிகளில் கிளிநொச்சியிலும், ஆவணி மாதம் 05ம் திகதி 06ம் திகதிகளில் மட்டக்கிளப்பிலும் இவ்விளையாட்டு போட்டியை நடத்துவோம்.
மாற்றத்தை நோக்கி மாற்றுத்திறனாளிகள் என்ற தொனிப்பொருளில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. எமது இந்த முயற்சிக்கு நீங்கள் ஆதரவு அளிப்பீர்கள் என்று ஒரு பெரு நம்பிக்கையோடு நாங்கள் காத்திருக்கிறோம்.
சமூகத்தில் ஒரு பெரு அங்கமாக இருக்கும் மாற்றுத்திறனாளிகள், அவர்களது அடிப்படை வசதிகள், அடிப்படை உரிமைகள் எமக்கு வேண்டுமென்று நாங்கள் கேட்கிறோம். குறிப்பாக போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் அணுகக்கூடிய வசதி கொண்ட கட்டிடங்களும், மாற்றுத்திறனாளிகள் அணுகக்கூடிய வசதி கொண்ட மலசல கூடங்களும், பொதுவான மற்றும் தனியார் இடங்களில் அமைய வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டு அது எங்கள் மாகாணங்களில் இறுக்கமாக இருக்கவேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கிறோம்.
நாம், மாற்றுத் திறனாளிகள், அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். ஆனால் அதேவேளை நாம் அற்ற அரசியல் ஒரு நேர்மைத் திறனற்ற அரசியலாகவே இருக்கும். இதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். உங்கள் அனைவரையும் நாங்கள் மைதானத்தில் காண வேண்டும் என்றும் எங்களை நீங்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.
எமது விளையாட்டுக்களுக்கான அனுசரனையும் , விளம்பரங்களையும் லண்டனை தளமாக கொண்டியங்கும் அமைப்புக்களும், வியாபார நிலையங்களுமே இதுவரை தந்துதுதவுகின்றன. அதெவேளை பிற நாடுகளில் இருக்கும் எம் உறவுகளும் எமக்கு நேரடியாக உதவலாம். உங்கள் விளாம்பரங்களை எமது போட்டிக்கு தருமாறு கேட்டு நிற்கின்றோம் லண்டனில் எமக்கான இன்னிசையோடு இராப்போசனம்...
எமது போட்டிகளை ஆதரவு தேடி, ஓர் இன்னிசையோடு ஓர் இராப்போசனத்தை நடாத்துகின்றோம். இந்த நிகழ்வு யூன் மாதன் 24ம் திகதி, லண்டனில் நட்சத்திரா மண்டபத்தில் நடைபெறும். இந்நிகழ்வுற்கு லண்டனில் வாழும் உறவுகள் கலந்து கொண்டு நீங்களும் மகிழ்ந்து எம்மையும் மகிழ்விக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்,
கோமாதா பண்ணைத் திட்டம் - Cowmatha Farm Project
மாற்றுத் திறனாளிகளின் தொழில் முயற்சியை ஊக்கப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை உறிதிப்படுத்தும் நோக்கோடு தொழிற்பண்ணைகளை உருவாக்கும் முயற்சியில் மாற்றுத் திறனாளிகள் ஈடுபடுகின்றனர் சிறிய அளவில் வீட்டு பண்ணைகள் , தோட்டங்களை நடாத்தி, தமது உழைப்பில் வாழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டாக இணைந்து பெரும் பண்ணைகளை உருவாக்க விளைகின்றார்கள். இந்த முயற்சியில் முதற்கட்டமாக இரு பாற்பண்ணைகள் நிருவப்படுகின்றது. முதலாவது பண்ணை வன்னிப்பகுதியிலும் அடுத்த பண்ணை மட்டக்களப்பிலும் அமைக்கப்படும்.
விளையாட்டு போட்டிகளுக்கான சேர்க்கப்படும் நிதியில், விளையாட்டு போட்டிகளுக்கு செலவாகும் நிதி , மாற்றுத் திறனாளிகளை நிறுவனமாக்கி வளர்க்க தேவையான நிதி தவிர மீதமான அனைத்து பணமும் இப்பண்ணைகளில் முதலிடப்படும்.
மாற்றுத் திறனாளிகளின் தொழில் முயற்சியில் நீங்களும் ஒரு பக்காளராக இணைய தமிழ் மாற்றுத் திறனாளிகள் உங்களை அழைக்கின்றார்கள்............................
மாற்றத்தை நோக்கி மாற்றுத் திறனாளிகள்.